குருணாகல் பிரதான வீதியில் விபத்து நால்வர் உயிரிழப்பு
![குருணாகல் பிரதான வீதியில் விபத்து நால்வர் உயிரிழப்பு](https://tamilvisions.com/uploads/images/202502/image_870x_67ab09eb8a1ac.jpg)
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் தோராய பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தை அடுத்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விபத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள ஐந்து நோயாளர்கள் தற்போது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக குருணாகல் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (10) அதிகாலை இரண்டு தனியார் பஸ்கள் மோதி இடம்பெற்ற குறித்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த 34 பயணிகள் குருணாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நால்வர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருணாகல் நகரத்திலிருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் தோராய பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கதுருவெலயிலிருந்து குருணாகல் நோக்கி பயணித்த பாதை இலக்கம் 48 இன் கீழ் இயங்கும் தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொள்வதற்காக குறித்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, மதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக பயணித்த மற்றுமொரு தனியார் பஸ், நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸின் பின்னால் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
இதேவேளை, விபத்துக்கு காரணமான பஸ் சாரதி கைது செய்யப்பட்டு நேற்று குருணாகல் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சாரதியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.