தமிழ் மொழியின் தொன்மையை அடையாளப்படுத்திய சர்வதேச பத்திரிகை!

தமிழ் மொழியின் தொன்மையை அடையாளப்படுத்திய சர்வதேச பத்திரிகை!

சுவிட்சர்லாந்தில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை ஒன்றில் உலகின் மிக பழமைவாய்ந்த மொழிகளின் பட்டியலில் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, குறித்த பத்திரிகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உலக வரைபடத்தில் இலங்கையை மையப்படுத்தியே தமிழ் மொழி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

சுவிட்சர்லாந்தில் உள்ள வியாபார நிறுவனம் ஒன்று வாராந்தம் வெளியிடும் Coopzeitung என்ற இந்த வார பத்திரிகையில் 95ஆம் பக்கத்தில் வெளிவந்த பதிவிலேயே இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த பத்திரிகையில், வாராந்தம் அந்த பகுதியில் வாசகர்களால் கேள்வி கேட்கப்படும் நிலையில் அவற்றிற்கு பத்திரிகை ஆசிரியர் பதில் அளிப்பார். 

இதற்கமைய, இந்த வாரம் உலகத்தில் பழமையான மொழி எது என்னும் கேள்வி ஒரு வாசகரால் எழுப்பப்பட்டுள்ளது.

அந்த கேள்விக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில், உலகில் மிகவும் பழமையான, இன்றும் பேசப்படுகின்ற மொழி என்று முதலாவதாக தமிழ் மொழி குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், தமிழ், சீனம், அரபு, பேர்சி மற்றும் அரமேயம் ஆகிய மொழிகளை மிகவும் பழமையான மொழிகள் என்று அந்த பத்திரிகையில் வரிசைபடுத்தியுள்ளார்கள். 

அதேவேளை, இந்த மொழிகளை உலக வரைபடத்தில் அடையாளபடுத்துகையில், தமிழ் பேசப்படும் பகுதி என நேரடியாக இலங்கையே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி, இந்த பத்திரிகையின் பதிவில் கடைசியாக கேள்விக்கான பதிலாக தமிழ் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.

இந்நிலையில், தமிழ் மொழியினை அங்கீகரிக்கும் வகையில் பிற மொழிகள் பேசும் நாடொன்றில் முதன்மைபடுத்தப்பட்டுள்ளமையும் இலங்கையை அடையாளபடுத்தியுள்ளமையும் தமிழ் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.