நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா தொடர்பில் அரசாங்க அதிபரின் அறிவிப்பு!
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் யாழ்ப்பாண மாநகர ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா விடயம் தொடர்பாக, தங்களின் JMC/EB/Nallur Fes/2024 ஆம் இலக்க 2024.08.24 ஆந் திகதி கடிதம் சார்பாக,
அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட களவிஜயத்திற்கு அமைவாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் தங்களுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலுக்கு அமைவாகவும்,
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் விசேட திருவிழா தினங்களான 2024.08.31, 2024.09.02 ஆந் திகதி வரையான காலப்பகுதியில் அளர்த்த முன்னாயத்த நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக பின்வரும் விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சிபார்சானது முன்வைக்கப்பட்டுள்ளது என்பதனை தங்களுக்கு அறியத்தருகின்றேன்.
கோயில் வீதி பருத்தித்துறை வீதியிலிருந்து கைலாச பிள்ளையார் கோயில்வரை உள்ள கோவில் வீதியினை கோவிலிலிருந்து மக்கள் வெளிச்செல்லுகின்ற ஒருவழி பாதையாக மட்டும் பயன்படுத்துதல்.
இவ்வாறு நடைமுறைப்படுத்துவதன் மூலம் அவசர வெளியேற்று பாதையாக மேற்படி பாதையினை பயன்படுத்த முடியும்.
இதனால் அவசர தேவை கருதி வெளியேற்றப்பட வேண்டியவர்களை வெளியேற்றுவது இலகுவானதாக காணப்படும்.
மேலும் மேற்படி விடயத்தினை முற்கூட்டியே தகவல் தொடர்பு சாதனங்கள், பத்திரிகைகள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தலை வழங்குதல்.
ஆலயத்தின் பின்புறமாக ஒருவர் மட்டும் செல்லக்கூடியதாக மூடப்பட்டுள்ள பருத்தித்துறை வீதியினை குறித்த தினங்களில் முழுமையாக மக்கள் பாவனைக்காக திறந்து விடுவதன் மூலம் மக்கள் நெருக்கடியினை குறைத்துக்கொள்ள முடியும்.
மேற்படி நடைமுறைகளை விசேட திருவிழாக்களான சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்களின் போது நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஆலய சூழலில் அனர்த்தம் ஏற்படுவதனை தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதனை தங்களுக்கு அறியத்தருகின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.