வட்டுக்கோட்டையில் உயிரிழந்த சந்தேகநபருடன் கைதான மற்றுமொரு சந்தேக நபருக்கு பிணை!
வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சந்தேகநபருடன் கைதான மற்றுமொரு சந்தேக நபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் குறித்த இருவரும் கடந்த 12ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில், அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
திருட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மற்றைய சந்தேகநபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலால் குறித்த இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்து, அவரின் சடலத்தை ஏந்தியவாறு சித்தங்கேணி பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
குறித்த இளைஞரின் மரணத்திற்கு நீதி வேண்டுமெனவும் பொலிஸாரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் சிலரால் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் அடங்கிய குழுவினர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரினாலும் தமக்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இது தொடர்பான விசாரணைகளின் முடிவில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்
இதேவேளை, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் நான்கு உத்தியோகத்தர்கள் இந்த சம்பவத்தை அடுத்து இடமாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களுக்கு அவர்களால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.