பதுளை - கொழும்பு பிரதான மார்க்கத்தில் போக்குவரத்து முற்றாக தடை - பாரிய மண்மேடு சரிவு!
பதுளை - கொழும்பு பிரதான மார்க்கத்தில் பலாங்கொடை பம்பஹின்ன பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் பதுளை கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதனால் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பலாங்கொடை - ராசகலை எல்லவத்த பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதனால் குறித்த வீட்டில் வசித்து வந்த எட்டு பேரும் தற்காலிகமாக
உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
இதேவேளை, பலாங்கொடை பல்லேகந்த வீதி மற்றும் பெட்டிகள வீதிகளில் நிலம் தாழ் இறங்கியுள்ளது.
பலாங்கொடை - மாரத்தென்ன தென்கலை தோட்ட மேல் பிரிவில் நிலம் தாழ் இறங்கியுள்ளது.
குறித்த பகுதியில் வசித்து வந்த ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் தோட்டத்தில் உள்ள மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்ப்பட்டனர்.
குறித்த மண்டபம் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதால் அவர்கள் தமது இருப்பிடங்களுக்கு மீண்டும் வந்துள்ளனர்.
இந்தநிலையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரி குறித்த பகுதியில் பரிசோதனைகளில் ஈடுபட்டார்.
வாழ்வதற்கு அபாயமற்ற பகுதிகளில் மக்கள் குடியேறலாம் என்றும் குறிப்பிட்டார்.
இருந்தபோதும், பாதுகாப்பு அற்ற சூழலில் தாம் வாழ்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, சீரற்ற காலநிலை மற்றும் தொடர் மழையால் பலாங்கொடை பெட்டிகல, மற்றும் நியூ பெட்டிகல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதனால் போக்குவரத்தும் தடைப்பட்டது.
அத்துடன் பலாங்கொடை ஹுனுகுபுர பிரதேசத்தில் மதிலொன்று வீட்டின் மேல் விழுந்ததில் அந்த வீடு முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
பெண் ஒருவர் காயங்களுடன் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.