தாயகத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க ஊடக அறிக்கை!
தாயகத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க ஊடக அறிக்கை நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டாளர் எஸ்.கோகுலனால் வாசிக்கப்பட்டது.
குறித்த அறிக்கை பின்வருமாறு-
'சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஐக்கிய இராச்சியம் லண்டனில் பாரிய கவனயீர்ப்பு போராட்டமும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளும்
கடந்த 30.08.2024 அன்று மாலை 5 மணித்தொடக்கம் 8 மணிவரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக எமது தாயகத்தில் 15 வருடங்களுக்கும் மேலாக எமது தமிழீழ தாயகத்தில் நீதிக்காக போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினருக்கு எமது ஆதரவை தெரிவிக்கும் நோக்கிலும், வலிந்து காணாமல் செய்தல் உட்பட பாரிய மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களை புரிந்த இலங்கை அரசின் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டு செல்வதற்காக சர்வதேச சமூகத்தின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக ஐக்கிய இராச்சியம், லண்டன் ட்ரபல்கர் ஸ்குயாரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும், சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் பிரதான ஒழுங்கமைப்பாளர்களான நாடுகடந்த தமிழீழ அரசின் டயஸ்போரா அபிவிருத்தி அமைச்சர் மதிப்புக்குரிய மணிவண்ணன் பத்மநாபன், பிரதி சமூகஊடக அமைச்சர் மதிப்புக்குரிய வினோதன் ஸ்ரீதரன் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய யோகன் ரட்ணம் ஆகியோர் பிரித்தானிய வாழ் தமிழீழ மக்களுக்கு நிகழ்வுக்கான அழைப்பிணை விடுத்திருந்தனர்.
இந்நிகழ்வில் பொதுமக்கள், இளைஞர்கள், செயற்பாட்டாளர்கள் என 700கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் மதிப்புக்குரிய விசுவநாதன் உருத்ரகுமாரன் அவர்களின் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தின ஊடக அறிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனப்படுகொலை மற்றும் மனித உரிமைகளுக்கான தடுப்பு மற்றும் பொறுப்புக்கூறல் அமைச்சர் மதிப்புக்குரிய துஷானி ராஜவரோதயம் அவர்களால் வாசிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தாயகத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஊடக அறிக்கை நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டாளர் திரு எஸ்.கோகுலன் அவர்களால் வாசிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டாளர்களான செல்வி.ஷ்ரேயா யோகன், திரு.இன்பன் மாஸ்டர், திரு.முருகானந்தம், திரு அந்தோணி ஜுட் தனுஜன், திரு.ஜெயப்பிருந்தான் ஸ்கந்தராஜா, திரு. பியதாச கலைச்செல்வம், திரு.நிரூன் பிரசாந்த் நாகேந்திரன், திரு.சுஜிதரன் நித்தியானந்தம், நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதி சமூகஊடக அமைச்சர் மதிப்புக்குரிய வினோதன் ஸ்ரீதரன் மற்றும் டயஸ்போரா அபிவிருத்தி அமைச்சர் மதிப்புக்குரிய மணிவண்ணன் பத்மநாபன் ஆகியோரின் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் மற்றும் இலங்கை சிங்கள மேலாதிக்க அரசின் மனிதஉரிமை மீறல்கள் சம்பந்தமான உரைகளும் இடம்பெற்றதுடன் நிகழ்வின் இறுதியில் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற உறுதிமொழியேற்புடன் நிகழ்வு நிறைவுசெய்யப்பட்டது.