பெல்ஜியம் – இலங்கை நாடாளுமன்ற தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு முனைப்பு!

பெல்ஜியம் மற்றும் இலங்கை நாடாளுமன்றங்களுக்கு இடையிலான தொடர்புகளையும், கருத்துப் பரிமாற்றங்களையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு நாடுகளினதும் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆராய்ந்துள்ளனர்.

பெல்ஜியம் – இலங்கை நாடாளுமன்ற தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு முனைப்பு!

பெல்ஜியத்துக்கான இலங்கை தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதம் மற்றும் பெல்ஜியம்  இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவர் அலெஸியா க்ளேஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த (14) வியாழக்கிழமை ப்ருசேல்ஸில் நடைபெற்றது. 

தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், பிரியாவிடை வழங்கும் விதமாக நடைபெற்ற இச்சந்திப்பில் பெல்ஜியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான நாடாளுமன்ற தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு மற்றும் நட்புறவை மேம்படுத்திக்கொள்வதற்கு அவ்விரு நாடுகளினதும் அரசியல் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றம் அவசியம் என இரு தரப்பினரும் சுட்டிக்காட்டியதுடன், கொவிட் 19 வைரஸ் பெருந்தொற்றை அடுத்து இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது இரு நாட்டுப் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான தொடர்புகளில் மந்தகரமான நிலையைத் தோற்றுவித்ததாகவும் ஏற்றுக்கொண்டனர்.

அதேவேளை எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து இலங்கை தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதத்திடம் பகிர்ந்துகொண்ட அலெஸியா க்ளேஸ், புதிதாக தெரிவுசெய்யப்படும் நாடாளுமன்றம் இரு நாடுகளுக்கும் இடையிலான நாடாளுமன்றத் தொடர்புகளை மீண்டும் வலுவாகக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி செயலாற்றும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.