இலங்கைத் தமிழர்களுக்கு போலி கடவுச்சீட்டு வழங்கிய பொலிஸ் அதிகாரி பணியி நீக்கம்!

இலங்கை தமிழர்களுக்கு போலி கடவுச்சீட்டு வழங்கியது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இதற்கு உடந்தையாக இருந்த பொலிஸ் நிலைய எழுத்தாளர் சேஷாவை தஞ்சாவூர் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் இன்று (16) பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு போலி கடவுச்சீட்டு வழங்கிய பொலிஸ் அதிகாரி பணியி நீக்கம்!

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியில் இருந்து, இலங்கை தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம், கடவுச்சீட்டு தயாரித்து விநியோகம் செய்யப்பட்டு வருவதாக, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், குற்றப்பிரிவு மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சிவசங்கரன், ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஆண்டிக்காடு கிராம அஞ்சலகத்தில், பணியாற்றும் ஊழியர் கோவிந்தராஜ்(64), பட்டுக்கோட்டை ரயில்வே நிலைய பகுதியில் கும்பகோணத்தைச் சேர்ந்த வடிவேல்(52), ராஜமடத்தை சேர்ந்த சங்கர்(42) ஆகியோரிடம் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட கடவுச்சீட்டுகளை விநியோகம் செய்வதாக கிடைத்த தகவலின்படி, கடந்த 12 ஆம் திகதி கோவிந்தராஜ், வடிவேல் மற்றும் சங்கர் ஆகிய மூவரையும் பொலிஸார் மடக்கிப்பிடித்தனர்.  
 
அப்போது, மூவரிடமும் பொலிஸார் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு போலியாக ஆவணங்கள் தயாரித்து, அதை இணையம் மூலம் விண்ணப்பித்தும், உரிய பொலிஸ் விசாரணை ஏதும் நடத்தாமல், அதற்கு ஒப்புதல் வழங்கியும், கடவுச் சீட்டு அலுவலகத்தில் உள்ள சிலரின் துணையோடு இந்திய அரசின் கடவுச்சீட்டை வழங்கியது தெரியவந்தது.

இதையடுத்து கடவுச்சீட்டு விவகாரத்தில் உடந்தையாக செயல்பட்ட சேதுபாவாசத்திரம் பொலிஸ் நிலையத்தில் தற்காலிக கணினி இயக்குபவரான பாலசிங்கம்(36), சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த ஓய்வுப்பெற்ற தபால்காரர் பக்ரூதீன், திருச்சி  கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த வைத்தியநாதன்(52), திருச்சி உறையூரைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் சுந்தர்ராஜ், கும்பகோணத்தை சேர்ந்த ராஜூ(31) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும், இவர்கள் போலியாக ஆவணங்கள் மூலம் 28 கடவுச்சீட்டுகளை தயாரித்து வினியோகம் செய்துள்ளதாக தெரியவந்தது.

இந்த கடவுச்சீட்டு மூலம் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதற்காக பல ஆயிரக்கணக்கான ரூபாய் பெற்றுக் கொண்டு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இலங்கை தமிழரான சுந்தர்ராஜ், சேதுபாவாசத்திரம் பக்ருதீன் ஆகிய இருவரையும்  போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் கடந்த 13 -ஆம் திகதி இரவு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
  
கோவிந்தராஜிடம் வடிவேல், சங்கர் இருவரும் கூறும் முகவரிக்கும் வரும் கடவுச்சீட்டை, தங்களிடம் கொடுக்க வேண்டும் என கூறி அவருக்கு கடவுச்சீட்டு ஒன்றுக்கு ரூ. 1000 பணத்தை கொடுத்துள்ளனர். கடவுச்சீட்டு போலியானது என்பது தெரிந்தும், பணத்தை பெற்றுக்கொண்டு கோவிந்தராஜ் கடவுச்சீட்டை வழங்கியுள்ளார்.  

இலங்கை தமிழரான சுந்தர்ராஜ்  போலியான ஆதார், வாக்காளர் அட்டை, பாடசாலை மாற்று சான்றிதழ், உள்ளிட்ட போலிச் சான்றிதழ்களை தயாரித்து, கும்பகோணம் மகாமகக்குளம் அருகில் உள்ள சரண் பிரவுசிங் சென்டர் நடத்தி வரும் ராஜீ  மூலம் இணையம் மூலம் பதிவு செய்து விண்ணப்பம் செய்துள்ளனர். 

கடவுச்சீட்டு அலுவலகத்தில் எப்படி ஆதாரை ஏமாற்றி மாற்றி பயன்படுத்தினார்கள் போன்றவை குறித்து விசாரணை நடந்து வருகிறது.

போலியான  ஆவணங்கள் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசின் கடவுச்சீட்டு பெறுவதற்கு உறுதுணையாக செயல்பட்ட  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பொலிஸ் நிலைய எழுத்தாளர் சேஷாவை  தஞ்சை பிரதி பொலிஸ் ஆய்வாளர் ஆஷிஸ் ராவத் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அங்கு பணியாற்றிய தனிப்பிரிவு பொலிஸ் அலுவலர் சச்சிதானந்தம் அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.