VAT வரி விகிதம் 18% அதிகரிப்பு - வரவு செலவுத் திட்டம் முழுவிபரம்!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

VAT வரி விகிதம் 18% அதிகரிப்பு - வரவு செலவுத் திட்டம் முழுவிபரம்!

இது இலங்கையின் 78 ஆவது வரவு செலவு திட்டமாக கருதப்படுகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, அரசாங்கத்தின் மதிப்பிடப்பட்ட செலவினம் 3 ஆயிரத்து 860 பில்லியன் ரூபாயாகும்.

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, மதிப்பிடப்பட்ட செலவினம் 3 ஆயிரத்து 657 பில்லியன் ரூபாயாகும்.

இதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், அடுத்த ஆண்டுக்கான உத்தேச செலவு 203 பில்லியன் ரூபாயினால் அதிகரித்துள்ளது.

அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கு உத்தேச செலவுகளுக்காக அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த அமைச்சுக்கு 885 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபாயும், கல்வி அமைச்சுக்கு 237 பில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், இது கல்விக்காக ஒதுக்கப்பட்ட மொத்த ஒதுக்கீடு இல்லையென கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கான ஒதுக்கீடுகளின் கீழ் கல்விக்காக மேலதிகமாக நிதி ஒதுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், வரவு செலவு திட்ட 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் நீங்கலாக 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதன்பின்னர், ஞாயிற்றுக்கிழமைகள் நீங்கலாக 22ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை 19 நாட்கள் குழுநிலை விவாதம் நடைபெறும்.

இதனையடுத்து 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் நிலை நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தஹது வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.

அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2022 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசாங்க வருமானம் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் அதிக வரிச் சலுகைகளை வழங்குவதற்கு இடமுள்ளது.

2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் 70% ஆக உயர்ந்த பணவீக்கம், 2023 ஒக்டோபரில் 1.5% ஆக வெற்றிகரமாகக் குறைக்கப்பட்டதை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

அரச ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு 2500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கும் காணி உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 04 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் காணி உரித்தினை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டு தற்பொழுது நடைமுறையில் இல்லாத மாணவர் காப்புறுதித் திட்டத்தினை மீள அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

2024 ஜனவரி முதல் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 17,800 ரூபாய் வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கிராமப்புறங்களில் உள்ள வீதிகளை பராமரிக்க 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரச ஓய்வூதியதாரர்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 6,025 ரூபாய் வரை அதிகரிக்கப்படும்.

சென்னையிலுள்ள IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ் கண்டியில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நிறுவப்படும்.

பதுளை போதனா வைத்தியசாலையில் இருதய நுரையீரல் புத்துயிர் பெறும் பிரிவை நிறுவுவதற்கும் அவற்றுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அஸ்வெசும வேலைத்திட்டம், ஊனமுற்றோர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளுக்காக 2024 இல் ஒதுக்கப்படும் தொகை, 205 பில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கப்படும்.

சுற்றுலாத் துறைக்காக நுவரெலியா தபால் அலுவலகம் ஒதுக்கப்பட்டமை தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல எனவும், மாறாக அது நுவரெலியாவின் அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்ட காலமாக இடம்பெற்று வரும் வரி ஏய்ப்புக்கள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பல முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கையில் மருத்துவ ஆராய்ச்சியை மற்ற நாடுகளின் நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக 75 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு பின்னர் மேலும் நிதி ஒதுக்கப்படும்.

பதுளைக்கு இதயமும் நுரையீரலும் புத்துயிர் பெறும் மருத்துவ பிரிவு வழங்கப்படும். அதற்காக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

பாரம்பரிய சொத்துக்களை இழந்த விவசாயிகளுக்கு அந்த வயல் நிலங்களின் முழுத் தனியுரிமை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

உள்ளூர் ஆயுர்வேத பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

நகர்ப்புறங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் இருந்து வாடகை வசூலிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டு, அந்த வீடுகளின் உரிமையை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நான்கு புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் வீதிகளின் பராமரிப்புக்காக இரண்டு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

பாதிப்படைந்த கிராமப்புற சாலைகளை பராமரிக்க 1,000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மலையக பிரதேசங்களில் பொது வசதிகளை மேம்படுத்த 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அப்பால் 600 ஏக்கர் நிலம் சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ஒதுக்கப்படும்.

பொருளாதார நெருக்கடியால் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்க 55 பில்லியன் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு 5,000 ரூபாவிலிருந்து 7,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிம்சவிய வேலைத்திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

பெருந்தோட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கான மற்றும் காணி உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

இலங்கையின் சுங்கச் சட்டங்களை நவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2024ஆம் ஆண்டில் கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமைகள் வழங்கப்படும்.

நிலம் மற்றும் வீட்டு உரிமைகள் முழுமையாக மக்களுக்கே வழங்கப்படுகின்றன.

இந்த முறைப்படி மக்கள் தொகையில் எழுபது வீதமானோர் காணி மற்றும் வீட்டு உரிமையாளர்களாக மாறுகின்றனர்.

இலங்கையின் இரத்தினக்கல் தொழிற்துறையில் முழுத் திறனை அடைய 03 மாத சிறப்புத் திட்டம்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 30 பில்லியன் ரூபாய் கடன் வசதிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமூக பாதுகாப்புத் திட்டங்களில் அஸ்வெசும திட்டத்துக்கான ஒதுக்கீடுகள் முன்று மடங்காக்கப்படும்.

2024 ஜனவரி மாதம் தொடக்கம் VAT வரி விகிதம் 18% வரை அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலம், கல்வி மற்றும் சில அத்தியாவசிய உணவுகள் தொடர்பான தயாரிப்புகளைத் தவிர மற்ற அனைத்து பொருள் மற்றும் சேவைகளுக்கான VAT வரிவிலக்குகளும் நீக்கப்படும் என ஜனாதிபதி தனது வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியால் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்க 55 பில்லியன் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக இடம்பெற்று வரும் வரி ஏய்ப்புக்கள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் வரவு செலவுத் திட்டத்தில் பல முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசாங்க வருமானம் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் அதிக வரிச் சலுகைகளை வழங்குவதற்கு இடமுள்ளதாக ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.