இலங்கையுடன் பங்காளித்துவம் மேலும் பலப்படுத்தப்படும் - சீன வெளிவிவகார அமைச்சர் கின் கேங்க்
இலங்கையுடனான தமது பங்காளித்துவத்தை பலப்படுத்தவும் விரிவுபடுத்தவும் சீனா தயாராகவுள்ளதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கின் கேங்க் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடனான தமது பங்காளித்துவத்தை பலப்படுத்தவும் விரிவுபடுத்தவும் சீனா தயாராகவுள்ளதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கின் கேங்க் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை, இன்று (25) பெய்ஜிங்கில் சந்தித்தபோது, அவர் இதனை தெரிவித்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதார மாநாடு மற்றும் இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் சீனாவுக்கு சென்றுள்ளனர்.
உலகப் பொருளாதார மாநாடு எதிர்வரும் 27 முதல் 29 ஆம் திகதி வரை சீனாவின் தியான்ஜினில் நடைபெறவுள்ளது.
'தொழில்முனைவு: உலகப் பொருளாதாரத்தின் உந்து சக்தி' என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த மாநாட்டில் 90 நாடுகளைச் சேர்ந்த அரசியல் மற்றும் வணிகத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர், இந்த விஜயத்தின் போது சீனாவின் உயர்மட்ட பிரமுகர்களையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
அத்துடன், பெய்ஜிங்கில் வசிக்கும் இலங்கை சமூகம் மற்றும் தியான்ஜின் பல்கலைக்கழகத்தில் உள்ள இலங்கை மாணவர்களுடனும் அவர் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.