அமெரிக்காவின் நாடு கடத்தல்; பனாமாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் உட்பட சுமார் 300 பேர்!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சுமார் 300 சட்டவிரோத குடியேறிகள் தற்போது பனாமா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆவணமற்ற வெளிநாட்டினருக்கு எதிரான பாரிய அடக்குமுறையின் ஒரு பகுதியாக இவர்கள் பனாமாவின் தலைநகரில் அமைந்துள்ள Decápolis என்ற சொகுசு ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச அதிகாரிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையில் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளுக்காகக் காத்திருக்கும் போது, இந்த நபர்கள் ஹோட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் படங்கள் மற்றும் வீடியோக்களில்,
ஹோட்டலின் ஜன்னல்களில், “தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்” மற்றும் “நாங்கள் பாதுகாப்பாக இல்லை” என்று நாடுகடத்தப்பட்டவர்கள் வாசனங்களை எழுதி வெளிப்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் பொலிஸ் அதிகாரிகள் ஹோட்டல் வளாகத்தில் பாதுகாப்பில் இருப்பதனையும் காண முடிகின்றது.
அசோசியேட்டட் பிரஸ் செய்திச் சேவையின் அறிக்கையின்படி, நாடு கடத்தப்பட்ட சுமார் 300 பேரில் பெரும்பாலானோர் இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, வியட்நாம் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் நாடுகடத்தப்படுவதில் அமெரிக்கா சிரமங்களை எதிர்கொள்வதால் பனாமா ஒரு தடுப்பு நிலையமாக பயன்படுத்தப்படுகிறது.
எவ்வாறெனினும், இதற்கு பதிலளித்துள்ள பனாமாவின் பாதுகாப்பு அமைச்சர் பிராங்க் அப்ரேகோ, புலம்பெயர்ந்தோரின் சுதந்திரம் பறிக்கப்படவில்லை என்றும் அவர்கள் அவர்களின் பாதுகாப்பிற்காக எங்கள் காவலில் உள்ளனர் என்றும் கூறினார்.
பனாமாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான குடியேற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நாடு கடத்தப்பட்டவர்கள் மருத்துவ உதவி மற்றும் உணவைப் பெற்று வருவதாகவும் செய்தியாளர்களிடம் பேசிய அப்ரிகோ உறுதிப்படுத்தினார்.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ பனாமாவிற்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, மத்திய அமெரிக்க நாடு, நாடு கடத்தப்பட்டவர்களுக்கு “பாலம்” அல்லது போக்குவரத்து நாடாக சேவை செய்ய ஒப்புக்கொண்டது.
அதேநேரத்தில், வொஷிங்டன் இதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்கிறது.