அரச சொத்துக்களை தேர்தலுக்காக பயன்படுத்த வேண்டாம் - தேர்தல் ஆணைக்குழு!
அரச சொத்துக்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றதா என ஆராய்ந்து அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தனியான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
அரச சொத்துக்களை தேர்தல் நோக்கத்திற்காக பயன்படுத்தியமை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறும் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு இடையூறாக இருப்பதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தலைவர், அரச சொத்துக்களை தேர்தல் நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களிடமும் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக சுமார் 120 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன. ஆணைக்குழுவின் கூற்றுப்படி, பெறப்பட்ட முறைப்பாடுகளில் பெரும்பாலானவை தேர்தல் சட்டங்களை மீறியமை, அரச சொத்துக்களை தேர்தல் நோக்கங்களுக்காக பயன்படுத்துதல் உள்ளிட்டவையாகும்.
இதனிடையே, தேர்தல் வன்முறைகள் அதிகம் இடம்பெறும் என நம்பப்படும் இருபது பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்