வைத்தியர் ஷாஃபியின் புதல்வி - உயர் தரப் பரீட்சையில் 3 A!

வைத்தியர் ஷாஃபியின் புதல்வி - உயர் தரப் பரீட்சையில் 3 A!

2019 ஆம் ஆண்டு போலி கருத்தடை குற்றச்சாட்டுக்கு உள்ளாகியருந்த வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனின் மகள், 2024 க.பொ.த உயர்தரத் தேர்வில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற நிலையில் மருத்துவ பீடத்தில் சேர அனுமதி பெற்றுள்ளார்.

சர்ச்சையின் போது குடும்பத்தினர் சந்தித்த கடுமையான பொது கண்காணிப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக பாடசாலையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போதிலும், அவர் ஒரு தனிப்பட்ட பரீட்சார்த்தியாக தேர்வில் அமர்ந்ததன் மூலம் குறிப்பிடத்தக்க தைரியத்தையும் மீள்தன்மையையும் வெளிப்படுத்தினார்.

அவர் விஞ்ஞானப் பிரிவில் 3 ‘ஏ’ சித்திகளைப் பெற்று, மாவட்ட அளவில் 12 ஆவது இடத்தையும், தேசிய ரீதியில் 357 ஆவது இடத்தையும் பெற்று, அரச மருத்துவ பீடத்தில் இடம் பெற்றார்.

முன்னதாக, அவர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையிலும் சிறந்து விளங்கி, 9 ஏ சித்திகளைப் பெற்றார்.

மேலும் மக்களுக்கு சேவை செய்ய தனது தந்தையைப் போல மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

விசாரணைகளில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடைக்காததால், ஷாஃபி ஷிஹாப்தீன் மீதான வழக்கு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.

அவரது மகளின் சாதனை, மிகப்பெரிய துன்பங்களை எதிர்கொண்டபோது அவர் காட்டிய விடாமுயற்சிக்கு சான்றாக நிற்கிறது.