ஈஸ்டர் குண்டு வெடிப்புகள் : ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் - செனல் 4

2019 ஆண்டு ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் உடந்தையாக

ஈஸ்டர் குண்டு வெடிப்புகள் : ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் - செனல் 4
Channel 4

2019 ஆண்டு ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக  தகவலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிரித்தானியாவில் இயங்கும் செனல் 4 தொலைக்காட்சியில் இன்று வெளியாகியுள்ள முன்னோட்ட காணொளியில் தகவல் வழங்கியுள்ள ஒருவர், உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சாலிக்கும், ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் இணைந்த தாக்குதல்தாரிகளுக்கும் இடையில், ஒரு சதித்திட்டம் தீட்டுவதற்காக, தாம் 2018 இல் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தை அடுத்து, தம்மிடம் வந்த சுரேஷ் சாலி, ராஜபக்சக்கள் இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல் தேவை, அதுதான் கோட்டாபய ஜனாதிபதியாவதற்கு ஒரே வழி என்று கூறியதாக தகவல் வழங்கியவரான ஹன்சீர் ஆசாத் மௌலானா கூறியுள்ளார்.

தாக்குதல் என்பது ஓரிரு நாட்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல, திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின் ஆறு மாதங்களில், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியைப் பிடித்தபோது, வாக்குறுதி அளித்தப்படி, சுரேஷ் சாலி அரச புலனாய்வுத் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையானின், முன்னாள் பேச்சாளரான ஆசாத் மௌலானா கடந்த ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறி ஐரோப்பிய புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் தனது சாட்சியத்தை முன்வைத்துள்ளார்.

அவர்களும், மௌலானாவின் கூற்றுகளை நம்பகமானதாகக் கருதி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிகழ்ச்சியின் இரண்டாவது தகவல் வழங்குனரான பெயரிடப்படாத சிரேஷ்ட அரசாங்க அதிகாரி ஒருவர், தாக்குதல்தாரிகளுடன் சுரேஷ் சாலியின் உறவு பற்றிய மௌலானாவின் கூற்றை உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் குண்டுவெடிப்புகளுக்கு முன்னும் பின்னும் இராணுவ புலனாய்வு காவல்துறை, விசாரணைகளை மீண்டும் மீண்டும் முறியடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

2019ல் கோட்டாபய ஆட்சிக்கு வந்ததும், விசாரணையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர், விசாரணை முற்றிலுமாக நாசப்படுத்தப்பட்டது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை முடிவடைந்த போது, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, அதன் அறிக்கையை வெளியிட மறுத்துவிட்டார்.

எனினும் சேனல் 4 க்கு எழுதிய கடிதத்தில், சுரேஷ் சாலி குற்றச்சாட்டுகளை "முற்றிலும் போலியானது" என்றும், எந்த தொடர்பும் இல்லை என்றும் மறுத்துள்ளார்.

தாக்குதல்தாரிகளுடன் தொடர்பு கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் திகதிகளில் அவர் இலங்கையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை செனல் 4 இன் கருத்துக்கு பிள்ளையானோ அல்லது ராஜபக்ச குடும்பத்தினரோ, இதுவரை பதிலளிக்கவில்லை என்று கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.