ரஸ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ட்ரோன் தாக்குதல்!
ரஷ்யாவும் உக்ரைனும் தமக்கிடையில் போர் தொடங்கியதில் இருந்து ஒன்றுக்கொன்று எதிராக மிகப் பாரியளவில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
தமது ஆறு பிராந்தியங்களில் 84 உக்ரைனிய ட்ரோன்களை இடைமறித்ததாக ரஷ்யா கூறியுள்ளது. சில ட்ரோன்கள் மொஸ்கோவை நெருங்கிய நிலையில் ஏவப்பட்டிருந்தன.
இதன் காரணமாக, தலைநகரின் மூன்று முக்கிய விமான நிலையங்களில் இருந்து விமானங்களைத் திருப்பிவிட வேண்டிய கட்டாயம் ரஷ்ய அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.
இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை இரவு ரஷ்யா 145 ஆளில்லா விமானங்களை, தமது நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் நோக்கி செலுத்தியதாகவும், எனினும் அதில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மோதலை முடிவுக்கு கொண்டு வர இரண்டு தரப்புக்கும் அழுத்தம் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த பரஸ்பரத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
உக்ரைனிய ட்ரோன் தாக்குதல்களால், மொஸ்கோவின் தென்மேற்கில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் நான்கு வீடுகள் இடிந்து விழுந்து தீப்பிடித்ததாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நகரத்தின் மீது ஏவப்பட்ட 34 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு மத்தியில் ரஸ்யாவினால் ஏவப்பட்ட ஈரானில் தயாரிக்கப்பட்ட 62 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது.
எனினும், தெற்கு உக்ரைனில், ரஷ்ய வான்வழி தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய ஆளுநர் விட்டலி கிம் தெரிவித்துள்ளார்.