சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக களைகட்டும் அறுகம்பே உல்லே பகுதி!
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காரணமாக பொத்துவில் அறுகம்பே பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளால் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
இதனால் அருகம்பே வளைகுடா கடற்கரையை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கடற்கரைப் பகுதிகள் சர்வதேச அரங்கில் பல்வேறு தர இடத்தினைப் பெற்றிருக்கின்றன.
அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அறுகம்பே கடற்கரைப் பிரதேசதம் பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால் இப்பிரதேசத்திற்கு தினமும் உள்ளுர் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதினைப் போக்குவதற்காக வருகை தருகின்றனர்.
கடந்த கால கோவிட் அனர்த்தம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், பொருளாதார சீர்கேடு (எரிபொருள் பற்றாக்குறை எரிவாயு பற்றாக்குறை) மற்றும் அரகல கிளர்ச்சி உள்ளிட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இப்பிரதேச சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது நாடு மீளளெழுச்சி பெற்று வருவதனால் இப்பிரதேசத்தின் துறைசார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தில் விருத்தி ஏற்பட்டு வருவதுடன் வர்த்தக பொருளாதார ரீதியிலான மேம்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
இங்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் கடலலை விளையாட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதற்கெனவும் அரச பாதுகாப்புப் படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அண்மையில் உள்ளூர் பயணிகள் 5 பேர் கடலலையில் சிக்குண்ட நிலையில், அங்கு நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப்படையின் உயிர் காப்பு படையினர் அவர்களை காப்பாற்றியிருந்தனர்.
இது தவிர இப்பகுதிகளில் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் வருகையினைப் போல் உள்ளுர் சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதிக்கு விருப்புடன் வருகை தருகின்றனர்.
இதனால் தங்குமிட வசதிகள் உணவகங்கள் அதிகளவில் இப்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், சர்வதேச அளவில் இக்கடற்பரப்பில் நீரலைச் சறுக்கு விளையாட்டுப் போட்டிகள் வருடந்தோறும் நடைபெற்று வருகின்றன.
இதனால் பல நூற்றுக்கணக்கான வெளிநாட்டு போட்டியாளர்களும் அவர்களோடு இணைந்ததாக பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்களும் இப்பிராந்தியத்திற்கு வருகை தருவது இலங்கை நாட்டுக்கு அந்நியச் செலாவணியினை பெருமளவில் ஈட்டிக் கொள்வதற்கு வழிகோலியாகவும் அமைகின்றது.
உள்ளுர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இப்பிரதேசத்தில் முகாமிட்டு சில நாட்கள் தங்கியிருந்து இப்பிரதேசத்தின் அழகினை ரசிப்பதனால் இங்கு பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிலையங்கள் அமையப் பெற்றுள்ளன.