தொலைக்காட்சி அலைவரிசைக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!
தேர்தல் ஊடக வழிகாட்டுதல்களை மீறியதாக பிரபல தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க ஒளிபரப்பு நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை விடுத்து, அந்த அலைவரிசையின் செய்திகளுக்கு எதிராக ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடுகளில், அவதூறான அறிக்கைகள் வெளியிடப்பட்ட காலை நிகழ்ச்சியின் உள்ளடக்கங்கள் குறித்து ஆணைக்குழு விவரித்துள்ளது.
குறித்த தொலைக்காட்சி அலைவரிசை ஊடக நெறிமுறைகளை மீறும் நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் பற்றி குறித்த சனலில் கலந்துரையாடப்பட்டதாகவும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை அலைவரிசை ஊக்குவித்து வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், அரசியல் கட்சிகளுக்கு எதிராக அவதூறான அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகவும், அதேசமயம் ஒரு கட்சி மாத்திரம் ஒளிபரப்பு வேளைகளில் தெளிவாக விளம்பரப்படுத்தப்பட்டதாகவும், ஆணைக்குழு கூறியது.
ஊடக நெறிமுறைகள் மற்றும் தேர்தல் ஊடக வழிகாட்டுதல்களை நிறுவனம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியது.