உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் குறித்த இறுதி அறிவிப்பு!
ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நாளை மறுதினத்துடன் நிறைவடையவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பணிப்புரைக்கு அமைய, இந்த புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது.
கடந்த வருடமும் இந்த வருடமும் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் கடந்த முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன.
அதன்படி, நாட்டின் உள்ள அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய வகையில் 5,000 மாணவர்களுக்கு, மாதாந்தம் 6,000 ரூபாய் பெறுமதியான புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த விண்ணப்பங்களை ஏற்கும் காலம் மேலும் நீட்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.