மாத்தறை சிறை அனர்த்தம் தொடர்பான மேலதிக தகவல்!
மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கட்டிடத்தின் மீது மரக்கிளை ஒன்று விழுந்ததில் காயமடைந்த 11 பேர் மாத்தறை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (01) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 12 கைதிகள் காயமடைந்துள்ளதுடன், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கைதி ஒருவர் உயிரிழந்தார்.
மிதிகம துர்க்கி கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஜி மற்றும் எஃப் தொகுதியின் மீது, அருகில் இருந்த மரத்தின் கிளை ஒன்று விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த கைதிகள் 25 முதல் 52 வயதுகளையுடைய தெனிபிட்டிய, மிரிஸ்ஸ, வெலிகம, காலி, மாத்தறை, கந்தர, படபொல, தெய்யந்தர மற்றும் கல்கமுவ ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தின் போது, ஜி மற்றும் எஃப் பகுதிகளில் சுமார் 100 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
தற்போது ஏனைய கைதிகள் அனைவரையும் வேறு கட்டிடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்க சிறைத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும், மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் அனைவரும் அல்லது ஒரு பகுதியினர் பாதுகாப்பாக வேறு சிறைக்கு மாற்றப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.