பெறுமதி சேர் வரியை 18% மாக அதிகரிக்க அரசாங்கம் அனுமதி
திருத்தங்களுக்கு உட்பட்டு பெறுமதி சேர் வரியை (VAT) 18% மாக அதிகரிப்பதற்கு அரசாங்க நிதி பற்றிய குழு ஒப்புதல் அளித்துள்ளது.
குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று (06) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், குழந்தைகளுக்கான உணவுகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் உரங்கள் ஆகியவற்றுக்கான பெறுமதி சேர் வரியை ரத்து செய்யுமாறும் அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிர்மாணத்துறையில் பயன்படுத்தப்படும் ஓடுகள் மற்றும் சுகாதாரப் பொருட்களுக்கு மீண்டும் அரசாங்கம் வரி விதித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எவ்வாறாயினும், ஓடுகள் மற்றும் சுகாதார பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், அதனுடன் தொடர்புடைய பொருட்களின் விலை தற்போது வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக, குறித்த இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஷமீந்திர குணசேகர தெரிவித்துள்ளார்.