பந்தை கையால் பிடித்து வரலாற்றில் இடம்பெற்ற வீரர் - வித்தியாசமான முறையில் ஆட்டமிழப்பு! (Video)

நியூசிலாந்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பங்களாதேஸின் துடுப்பாட்ட வீரரான முஷ்பிகுர் ரஹீம் பந்தை கையால் பிடிக்க முயன்று வரலாற்றில் முதன்முறையாக வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

குறித்த டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், பங்களாதேஸ் அணி தமது முதலாம் இனிங்ஸ்க்காக துடுப்பாடியது.

இதன்போது, போட்டியின் 41ஆவது ஓவரை நியூஸிலாந்து அணியின் கைல் ஜேமிசன் வீசினார்.

அந்த ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட முஷ்பிகுர் ரஹீம், பந்து மட்டையில் பட்டு விக்கெட்டை நோக்கி சென்ற போது, அதனை தமது கையால் தடுத்தார்.

இதனையடுத்து, அது தொடர்பில் நியூஸிலாந்து வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர்.

இந்தநிலையில், அது தொடர்பில், ஆராய்ந்த போட்டியின் மூன்றாம் நடுவர் “ஒப்ஸ்ரக்ட்டிங் த பீல்ட்” எனப்படும் களத்தை தடுத்தல் முறைமை மூலம் முஷ்பிகுர் ரஹீம ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.

கிரிக்கெட் விளையாட்டில் துடுப்பாட்ட வீரர் ஒருவரை ஆட்டமிழக்க செய்யும் 9 முறைகளில் களத்தை தடுக்கும் முறையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.