ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தை உறுதிப்படுத்திய இந்திய அரசாங்கம்!

ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தை உறுதிப்படுத்திய இந்திய அரசாங்கம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்றைய தினம் (04) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அமைச்சர் ஜெய்சங்கருடன் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் வரவுள்ளனர். புதிய ஜனாதிபதி கடந்த வாரம் பதவியேற்றதன் பின்னர், நாடு ஒன்றின் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறையாகும்.

புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது உயர்மட்ட பேச்சுவார்த்தையும் இதுவாக அமையவுள்ளது.

அதேவேளை, ஒக்டோபர் 2ஆம் திகதி உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை மீண்டும் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியமை என்பது குறிப்பிடத்தக்கது.