ஜனாதிபதியின் பதவி காலம் குறித்த மனுவிற்கான விசாரணை!

ஜனாதிபதியின் பதவி காலம் குறித்த மனுவிற்கான விசாரணை!

ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பாக தெளிவூட்டுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய, குறித்த மனுவை விசாரணை செய்வதற்கு ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமை, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நியமித்துள்ளார்.

இதன் அடிப்படையில், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்ணாண்டோ, பிரித்தீ பத்ம சூரசேன மற்றும் ளு. துரைராஜா ஆகியோர் இந்த மனுவை விசாரணை செய்யவுள்ளனர்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதி குறித்து உயர் நீதிமன்றத்தால் விளக்கம் அளிக்கப்படும் வரை தற்போது திட்டமிட்டபடி, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிடக் கோரி சமிந்த தயான் லேனவ என்பவர் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

எனினும், ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்த சமிந்த தயான் லேனவ என்பவர், தம்மிடமோ அல்லது சட்டத்தரணிகளிடமோ ஆலோசனை பெறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று சுட்டிக்காட்டியிருந்தது.

அது மாத்திரமன்றி, ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி ஆதரவளிப்பதாகவும்  அவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.