நத்தார் தின விசேட ஆராதனைகள் - தேவாலயங்களில் பொலிஸ் பாதுகாப்பு தீவிரம்!
நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்றிரவு கட்டான - ஹல்பேவில புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் பிரதான நத்தார் ஆராதனைகள் இடம்பெறவுள்ளன.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையில் குறித்த ஆராதனை நடைபெறவுள்ளதாக கொழும்பு பேராயர்களின் பொதுமக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக விசேட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 7,500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நத்தார் காலத்தில் கத்தோலிக்க தேவாலயங்களைப் பாதுகாப்பதில் முன்னுரிமை வழங்கப்படும் நிலையில், 'நீதி' என்று அழைக்கப்படும் யுக்திய நடவடிக்கை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு எதிரான யுக்திய நடவடிக்கைகள் குறைக்கப்பட்ட போதிலும், பொலிஸார் விழிப்புடன் உள்ளனர்.
அத்துடன் பொதுமக்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் சோதனைகளை நடத்த தயாராகவும் உள்ளனர் என்று தல்துவ குறிப்பிட்டுள்ளார்
கடந்த ஆறு நாட்களில் மட்டும், நடந்து வரும் 'நீதி' நடவடிக்கையின் மூலம் 12,132 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்
8 கிலோ ஹெராயின், 4 கிலோ ஐஸ் மற்றும் 269 கிலோ மரிஜுவானா என்பன இந்த காலப்பகுதிக்குள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
636 சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெற்று விசாரணைகள் இடம்பெறுகின்றன
151 நபர்களிடம் சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
998 பேர் புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.