மழை ஓய்ந்துள்ள நிலையில் அதிகரித்துள்ள முதலைகளின் நடமாட்டம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக பெய்துவந்த வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை கடந்த இரு தினங்களாக ஓய்ந்துள்ளது.
எனினும், வீதிகளிலும், கிராமங்களிலும் தேங்கியுள்ள வெள்ள நீர் வழிந்தோட முடியாதுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
மழை ஓய்ந்துள்ள நிலையில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வெல்லாவெளி, கோவில்போரதீவு, பெரியபோரதீவு உள்ளிட்ட பல பகுதிகளில் அண்மித்துள்ள குளங்களில் முதலைகள் நடமாடித்திரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளக்கரை ஓரங்களில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் முதலைகள் வேட்டையாடி வருவதாகவும், அப்பகுதிக்குச் செல்லும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மட்டக்களப்பு வாவியிலிருந்து கிராமங்களை அண்மித்துள்ள சிறிய குளங்களுக்கு குறித்த முதலைகள் வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.