அம்பாறையில் படுகொலை செய்யப்பட்ட குடும்பம் தொடர்பில் வெளியான தகவல்!

அம்பாறையில் படுகொலை செய்யப்பட்ட குடும்பம் தொடர்பில் வெளியான தகவல்!

பிபில, கரடுகல பொலிஸ் நிலையத்தில் இரவு பணியாளராக கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளால் மூன்று பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

நேற்று காலை T56 ரக ஆயுதத்தை பொலிஸ் நிலையத்திலிருந்து 32 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அம்பாறை, இகினியாகல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு எடுத்துச் சென்று அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிளை சுட்டுக் கொன்றுள்ளார்.

பின்னர் வேறொரு வீட்டிற்கு சென்று ஒரு தாய் மற்றும் மகள் சுட்டுக் கொலை செய்ததுடன், பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னைத்தானே சுட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இவரால் சுட்டுக்கொல்லப்பட்ட தாய் 54 வயதுடைய பெண் எனவும் மகளுக்கு 17 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தாயும் மகளும், உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டின் அயலவர்கள் எனவும் இரு குடும்பங்களுக்கும் இடையில் நீண்டகாலமாக காணி தகராறு இருந்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் வெளிவரவில்லை.

இந்த நிலையில், உயிரை மாய்த்துக் கொண்ட அதிகாரி வசிக்கும் வீட்டிற்கு 13 கிலோமீற்றர் தூரத்தில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி வசிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தரை கொன்றுவிட்டு 13 கிலோமீற்றர் தூரம் வந்து தாயையும் மகளையும் கொன்றுவிட்டு பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பியவர், மனைவிக்கு அழைப்பேற்படுத்தி தன்னைத் தேடவேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

தனது வங்கி புத்தகத்தில் உள்ள பணத்தை எடுத்து 3 பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ளுமாறும் மனைவியிடம் கூறியுள்ளார். இந்த தொலைபேசி அழைப்பினால் பதற்றமடைந்த மனைவி இரண்டு பிள்ளைகளுடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதையடுத்து பதற்றமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், மனைவியை அருகில் வர வேண்டாம் என சத்தமிட்டு கூறிய நிலையில் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார்.

அவர் அதிகாலை 2.05 மணியளவில் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியே சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. 32 கிலோமீற்றர் தூரம் சென்ற பிறகு அதிகாலை 2.45 மணியளவில் பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்தக் கொலையின் பின்னர், அதிகாலை 3.15 மணியளவில் தாயும் மகளும் கொல்லப்பட்டனர். பொலிஸ் நிலையத்திற்கு வந்த இந்த அதிகாரி அதிகாலை 4.10 மணியளவில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை பி புதிய நகரைச் சேர்ந்த லஹிரு உதார என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 43 வயதான அவர் 20 வருட சேவையில் இருந்த அதிகாரியாகும்.

மூவரைக் கொலை செய்ததுடன், உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் 14 வருட சேவையில் இருந்த அதிகாரி எனவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அத்துடன் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. காணி தகராறில் தாய் மற்றும் மகளின் கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இரு தினங்களுக்கு முன்னர் பேருந்து சாரதியை தாக்கிய சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிளே முறைப்பாடு பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.