உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை இன்று(1) நாடாளுமன்றில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை இன்று(1) நாடாளுமன்றில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை தொடர்பிலான விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.
இதன்போது, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனைக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி, இந்த யோசனையானது 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனைக்கு தமது கட்சி வாக்களிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னதாக அறிவித்திருந்தது.
அந்த கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த யோசனை திட்டத்தில் தேசிய பொருளாதாரத்திற்கு சாதகமான அம்சங்கள் காணப்பட்டாலும், பல பிரச்சினைகள் இருப்பதாக சுட்டிக்காட்டி வாக்களிப்பை தவிர்த்ததாக மைத்திரிபால சிறிசேனவின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
'இறையாண்மைப் படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுப்பதற்கு, உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம்' என்ற தலைப்பில் அரசாங்கம் இந்த யோசனையை இன்று முற்பகல் சபையில் சமர்ப்பித்தது.
சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த, இந்த யோசனையை சமர்ப்பித்தபோது, சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.
அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்ட யோசனைக்கு பதிலாக, வேறு யோசனை, ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக, அந்தக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா சபையின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து,சபை முதல்வரால், 'உள்நாட்டு அரச படுகடன் மறுசீரமைப்பிற்கான விரிவான முறைமையை நடைமுறைப்படுத்தல்' என்றவாறு அந்த யோசனை திருத்தப்பட்டது.