பாகிஸ்தானின் தேர்தல் முறை குறித்து சர்வதேச நாடுகள் கவலை!
பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் செயன்முறை குறித்து அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன கவலை வெளியிட்டுள்ளன.
அத்துடன், தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு பெற்ற வேட்பாளர்களுக்கும் இடையே போட்டி நிலவி வரும் நிலையில், அவர்கள் தனித் தனியாக வெற்றியை அறிவித்தனர்.
இந்தநிலையில் பாகிஸ்தானில், 265 தொகுதிகளில் தேர்தல் இடம்பெற்றது.
அதற்கமைய, அரசியல் கட்சியொன்று தனிப்பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், 133 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
இந்தநிலையில், வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவுகள் வெளியாகும் நிலையில், தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பீ.டி.ஐ. கட்சி 99 தேர்தல் தொகுதிகளில் வெற்றிபெற்று முன்னணியில் உள்ளதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீஃவ், லாகூர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.
அவரது புதல்வியும் லாகூர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 2007 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாரிஸ் பூட்டோவின் புதல்வரும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முழு அளவிலான தேர்தல் முடிவுகள் குறித்த விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.