அமெரிக்கா 50 பில்லியன் டொலரை இழப்பீடாக செலுத்த வேண்டும் - ஈரான் நீதிமன்றம்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமது உயர்மட்ட ஜெனரல் ஒருவரை கொலை செய்தமை குற்றத்திற்காக அமெரிக்க அரசாங்கம் 50 பில்லியன் அமெரிக்க டொலரை இழப்பீடாக வழங்க வேண்டுமென ஈரானிய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா  50 பில்லியன் டொலரை இழப்பீடாக செலுத்த வேண்டும் - ஈரான் நீதிமன்றம்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி காலத்தில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதியன்று பக்தாத் விமான நிலையத்துக்கு அருகே ஆளில்லா விமான தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்த தாக்குதலில் ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானியும், ஈராக் லெப்டினன்ட் அபு மஹ்தி அல்-முஹந்திஸீம் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 3,300க்கும் அதிகமான ஈரானியர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த தெஹ்ரான் நீதிமன்றம் தமக்கு ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதங்களுக்காக 49.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டுமென அமெரிக்க அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அரசாங்கம், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் உள்ளிட்ட 42 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெஹ்ரான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.