அமரகீர்த்தி அத்துகோரல கொலை விவகாரம்: நீதிபதிகள் ஆயம் நியமிப்பு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஆகியோர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஆகியோர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்காக, விசேட மூவரடங்கிய நீதிபதிகள் ஆயம் நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவினால் இந்த ஆயம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சஹன் யாப்பா பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் ருவன் பத்திரன ஆகியோர் அந்த ஆயத்தின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் 42 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் கம்பஹா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் தாக்கி கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.