பொது மன்னிப்பில் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் இருவர் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றினால் இவர்களின் விடுதலை உறுதிசெய்யப்பட்டது.

பொது மன்னிப்பில் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

கிளிநொச்சி மருதநகர் பகுதியை சேர்ந்த 69 வயதான செல்லையா நவரத்னம் மற்றும் யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த 56 வயதுடைய சண்முகரத்தினம் சண்முகராசா ஆகியோரே விடுதலையாகினர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செல்லையா நவரத்தினத்திற்கு 200 வருட சிறைத்தண்டனையும், சண்முகரத்தினம் சண்முகராசாவிற்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

விடுதலையான அரசியல் கைதிகளை தமிழ் அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்துள்ளதோடு, அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகம் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வலியுறுத்தி வருகின்ற நிலையில் குறித்த இருவரும் நேற்றைய தினம்  விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

அதுமாத்திரமன்றி வயது மற்றும் தேக ஆரோக்கியம், மற்றும் குற்றத்தின் தன்மையை அடிப்படையாக கொண்டு சிறைக்கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மேலும் நான்கு வருடங்களுக்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.