ஈழத்தமிழ் மக்களுக்கு கண்ணியமும் மரியாதையும் கொண்ட வாழ்க்கையை உறுதி செய்யுங்கள் - நரேந்திர மோடி வலியுறுத்தல்
13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி, ஈழத் தமிழ் மக்களுக்கு கண்ணியமும் மரியாதையும் கொண்ட வாழ்க்கையை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
அழைப்பு அதிதியான இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர் இந்திய பிரதமர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இலங்கை - இந்தியாவுக்கு இடையே அதிக தொடர்பை உறுதிப்படுத்தும் பல உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் 200 வருடங்களை பூர்த்தி செய்துள்ள இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான மேம்பாட்டு உதவிப் பொதியை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இலங்கையில் புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் பற்றிய பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை இந்தியா கொண்டுள்ளது.
சமத்துவம், நீதி மற்றும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு மறுசீரமைப்பு செயல்முறையை முன்னெடுத்துச் செல்லும் என்றும் இந்தியா எதிர்பார்க்கிறது.
அத்துடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கும் இலங்கை தனது உறுதிமொழியை நிறைவேற்றும் என நம்புவதாக பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.
ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க இருவரும் கால்நடை வளர்ப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் இரு தரப்புக்கும் இடையே இணையக்கட்டணச் சேவைகள் தொடர்பான ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.
இதன்படி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக 75 கோடி இந்திய ரூபாய் மதிப்பீட்டை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இலங்கை - இந்திய பாதுகாப்பும் வளர்ச்சியும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
எனவே, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் தேவைகளை உணர்ந்து ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தையும், வட இலங்கையின் காங்கேசன்துறையையும் இணைக்கும் வகையில் பயணிகள் படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் மோடி அறிவித்துள்ளார்.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினை குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததுடன், குறித்த விவகாரத்தை 'மனிதாபிமான கண்ணோட்டத்தில்' பார்க்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.
இந்தநிலையில் தமது கருத்தை வெளியிட்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் 'ஒருமித்த கருத்தை' நோக்கிச் செயல்பட முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை பொருளாதார வளர்ச்சி பாதையில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நவீன வரலாற்றில் மிகவும் சவாலான காலகட்டம்' என்று கடந்த ஆண்டை வர்ணித்த இலங்கை ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.