வருடாந்த அந்தோனியார் திருவிழாவிற்கு தயாராகும்  கச்சத்தீவு!

வருடாந்த அந்தோனியார் திருவிழாவிற்கு தயாராகும்  கச்சத்தீவு!

வருடாந்த கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.

கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான ஒரு சிறிய தீவு என்பதுடன், இலங்கை மற்றும் இந்தியாவின் சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு (IMBL) அருகில் அமைந்துள்ளது.

வருடாந்த பெருவிழாவின் பிரதான ஆராதனை யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம், யாழ்.மாவட்ட செயலாளர் ஆகியோர் இந்நிகழ்விற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ள பின்னணியில், பக்தர்களின் வசதிக்காக உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை கடற்படையினர் தற்போது முழுவீச்சில் செயற்பட்டு வருகின்றனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் உத்தரவுக்கமைய, வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவின் மேற்பார்வையின் கீழ், கச்சத்தீவில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதில் சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகள், தற்காலிக தங்குமிடங்கள், வீதிகள், இறங்குதுறைகள் மற்றும் மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், அதுமட்டுமல்லாமல், வருடாந்த திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் தற்காலிகமாக நோய்வாய்ப்பட்டவர்களை பரிசோதிக்க வளைகுடாவுக்கு உயிர்காக்கும் குழுக்கள் மற்றும் மருத்துவ குழுக்களை இலங்கை கடற்படை அனுப்பவுள்ளது.

மேலும், இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட விகாரைக்கான வண்ணப்பூச்சு, பழுதுபார்ப்பு, சுற்றுப்புற பகுதிகள் மற்றும் வளாகத்திற்கு செல்லும் பாதைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை கடற்படை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, வருடாந்த உற்சவத்தில் பெருமளவிலான இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காங்கேசன்துறையிலிருந்து தேவாலயத்திற்குத் தேவையான உபகரணங்கள், பாதிரியார்கள், அரச அதிகாரிகள், முக்கியஸ்தர்கள், பக்தர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் ஆகியோரை ஏற்றிச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கடற்படையினர் செய்துள்ளனர். 

அத்துடன், குறிகாட்டுவான் மற்றும் நெடுந்தீவில் இருந்தும் கச்சத்தீவுக்கு படகுசேவைகள் இடம்பெறும்.