பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட தொடருந்து நிலைய அதிகாரிகள் மீளவும் சேவையில்
பொடி மெனிகே தொடருந்தில் பயணித்த இரண்டு வெளிநாட்டு பயணிகளை தாக்கிய குற்றச்சாட்டில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட நாவலப்பிட்டி தொடருந்து நிலைய அதிகாரிகள் மீளவும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த சம்வத்துடன் தொடர்புடைய இரண்டு உதவி நிலைய அதிபர்களும், காவலர் ஒருவரும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்டு தேவையின் அடிப்படையில் மீளவும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
உரிய பணயச் சீட்டு இன்றி பொடி மெனிக்கே தொடருந்தில் பயணித்த இரண்டு வெளிநாட்டவர்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது
இதனையடுத்து, நாவலப்பிட்டி தொடருந்து நிலையத்தின் பணியாற்றும் 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த சம்பவம் தொடர்பில் தொடருந்து திணைக்களத்தின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் காரணமாக பொடி மெனிக்கே தொடருந்து சுமார் ஒரு மணித்தியாலயம் நாவலப்பிட்டி தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
குறித்த வெளிநாட்டவர்கள் இருவரும் அனுமதி சீட்டு இன்றி தொடருந்தில் பயணிக்க முயற்சித்திருந்த நிலையில் அவர்களை வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த வெளிநாட்டவர்கள் அதனை புறக்கணித்தமையை அடுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.