சனத் நிஷாந்தவின் பதவி மற்றும் ஆசனத்திற்கு இருவர் நியமனம்!
அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்தவின் நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு எல்.கே.ஜகத் பிரியங்கரவின் பெயரை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த அண்மையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தியிருந்தார்.
இதன்படி, குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக புத்தளம் மாவட்டத்தில் அவருக்கு அடுத்தப்படியாக அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ள எல்.கே.ஜகத் பிரியங்கரவின் பெயரை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வகித்துவந்த நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சு பொறுப்பு இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஷசீந்திர ராஜபக்ஷ நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
இந்தநிலையில், அந்த அமைச்சு பொறுப்புக்கு மேலதிகமாக அவருக்கு நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீர்ப்பாசன மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.