சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை!
தென்னிலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, வலல்லாவிட்ட மற்றும் மத்துகமை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பிரதேச செயலக பிரிவுக்கும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலக பிரிவுக்கும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காலி மாவட்டத்தின் யக்கலமுல்ல, எல்பிட்டிய மற்றும் நாகொட பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆற்றை அண்மித்த அக்குரஸ்ஸ பகுதி, வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மாத்தறை மாவட்ட கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்;.
இதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் வெள்ள அனர்த்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை பகிர்ந்தளிப்பதற்காக 600 பேர் அடங்கிய இரண்டு இராணுவ குழுக்கள் குறித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்ப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நில்வளா கங்கை, களுகங்கை, கிங் கங்கை மற்றும் அத்தனுகளு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நில்வளா கங்கையை அண்மித்துள்ள மக்கள் நீர்ப்பாசன திணைக்களத்தினால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆற்றை அண்மித்துள்ள பகுதிகளில் வெள்ளப் பெருக்குக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் காலி மாவட்டத்தில் உள்ள தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை பொகவந்தலாவை பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கெசல்கமு ஓயாவின் நீரமட்டம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பொகவந்தலாவ மற்றும் அதனை அண்டிய பகுதிகள் வெள்ள நீரிழ் மூழ்கியுள்ளன.
இதுதவிர, காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களில் நீர் வான் பாய்வதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, இன்று முற்பகல் 8.30 வுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி காலி - ஹினிதும பகுதியில் பதிவாகியுள்ளது.
இதன்படி, குறித்த பகுதியில் 181.5 மில்லிமீற்றர் அளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.