பணத்தை காலால் மிதித்த தியாகிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணத்தை பிரபல வர்த்தகர் ஒருவர் காலால் மிதிக்கும் காணொளி பதிவுகள் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் தலைமையகத்தில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான ஜெகத் விஷாந்த தலைமையிலான குழுவினரால் குறித்த வர்த்தகர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு நேற்றையதினம் (22) வரவழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அவரின் வாக்குமூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை கோடீஸ்வரராக மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய நிலையில், தன்னை தியாகி என தற்புகழ்ச்சி செய்து வருகின்றார்.
இவர், பெருந்தொகை பணத்தை தனது காலில் போட்டு மிதித்தமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் சட்டங்களுக்கு அமைய நாணயத்தை சேதப்படுத்துவது பாரிய குற்றமாகும்.
எனவே, இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.