தொடர் தோல்விகள் - இலங்கை அணியின் எதிர்காலம் என்ன? சிறப்புப் பார்வை

வேறு நாடுகள் இலங்கையின் பழைய வீரர்களை பயிற்சியாளர்களாக கொண்டு தமது திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில், இலங்கை அணிக்காக ஏன் அவ்வாறான பயிற்சியாளர்களை பணிக்கமர்த்தி இருக்கின்ற வீரர்களின் குறைநிறைகளை சமநிலைப் படுத்த முடியாது.

தொடர் தோல்விகள் - இலங்கை அணியின் எதிர்காலம் என்ன? சிறப்புப் பார்வை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சரமாரியான தோல்விகளை சந்தித்த இலங்கை அணி அடுத்து வரும் சில போட்டிகள் குறிப்பாக உலக செம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்கான தகுதியையும் இழந்தது.

இந்த நிலையில், உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை குழாம் இன்று அதிகாலை 5 மணியளவில் நாட்டை வந்தடைந்தது.

இந்தியாவில் நடைபெறும் வரும், உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை நேற்றைய தினம் தமது இறுதிப்போட்டியில் பங்கேற்றிருந்தது.

இலங்கைக்கு எதிரான போட்டியில் நியுஸிலாந்து அணி 5 விக்கட்டுக்களால் இலகுவான வெற்றியை பதிவு செய்து உலகக்கிண்ண அரையிறுதி வாய்ப்பை பெற்றுக் கொண்டது.

2025ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள செம்பியன்ஸிப் கிண்ணத் தொடரில், உலக கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகளில் முதல் 7 இடங்களை கைப்பற்றும் அணிகளுடன், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணியும் 8 வதாக தகுதியைப்பெறும்.

எனினும் உலக கிண்ண கிரிக்கட் தொடரின் குழுநிலை போட்டிகளில் அனைத்து போட்டிகளையும் இலங்கை நிறைவு செய்துள்ள போதும், புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

இதன்காரணமாக சராசரியாக விளையாடிய பங்களாதேஷ், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளை விடவும் இலங்கை அணி பலவீனமாக செயற்பட்டது.

இதற்கு காரணம் என்ன? அணிக்கான வீரர்கள் தெரிவில் ஏற்பட்ட குளறுபடியா? தெரிவுக் குழுவில் உள்ள குழப்ப நிலையா? இலங்கை கிரிக்கெட் சபையில் உள்ள ஊழல் மோசடி மற்றும் போட்டியாளர்களுக்கான சிறப்புரிமைகள் மீறப்பட்டு அவர்களுக்கான ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெறாமையால் முறையான பயிற்சிகள் வழங்கப்படவில்லையா?

வேறு நாடுகள் இலங்கையின் பழைய வீரர்களை பயிற்சியாளர்களாக கொண்டு தமது திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில், இலங்கை அணிக்காக ஏன் அவ்வாறான பயிற்சியாளர்களை பணிக்கமர்த்தி இருக்கின்ற வீரர்களின் குறைநிறைகளை சமநிலைப் படுத்த முடியாது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையும் நேற்று நாடாளுமன்றத்தின் ஏகமனதாக வாக்களிப்பின் மூலம் கலைக்கப்பட்டது.  தற்போது இடைக்கால சபையைக் கொண்டு எந்தவொரு உறுதியான தீர்மானங்களையும் எட்ட முடியாது..

விவாதங்களை மேற்கொண்டு மாத்திரம் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்ட முடியாது. 

அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் கதறுவதிலும் எந்தவித பயனும் இல்லை. கிரிக்கெட் சபையின் நிர்வாகம் முறையாக ஊழல் அற்ற வகையில் இயங்க வேண்டும்.

போட்டி வீரர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையிலான கொடுப்பனவுகள், அவர்களின் பயிற்சிகளுக்கான சிறந்த ஆலோசனைகள், பக்கபலமான நடுவர்கள் வேண்டும்.

அத்துடன் தேசிய ரீதியில் மாகாண போட்டிகளில் சிறப்பு திறமைகளை காண்பித்த வீரர்களை தெரிவு செய்து ஒவ்வொரு முறைக்கும் 5 பேர் வீதம் புதிய வீரர்களாக இணைந்துக் கொண்டு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்க முடியும்.

அவ்வாறு செய்யும்  போது இன மொழி பாகுபாடின்றி தன்னார்வ அடிப்படையில் அந்த 5 பேரும் தேசிய அணியில் இடம்பெறுவார்கள்.  

11 பேர் களத்தில் இருக்கும்  போது மேலும் 3 அல்லது 4 வீரர்கள் உதிரி வீரர்களாக இருப்பார்கள் அவர்களில் Swap  முறையில் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கும் போது அவர்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள்.

அண்மையில் இந்தியாவிற்கு வலைப்பயிற்சி வீரராக சென்றிருந்த ஜெப்னா கிங்ஸ் அணியின் வீரர் விஜயகாந்தி வியாஸ்காந்த் போன்றவர்களுக்கு இவ்வாறான வாய்ப்புகளை அளிக்கும் போது இலங்கை அணிக்கு தமிழ் ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும்.

தற்போது வேறு நாட்டு அணிகளுக்கு ரசிகர்கள் ஆதரவளிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.  இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியுஸிலாந்து அணிகளுக்கு சில நேயர்கள் உணர்வு ரீதியாக ஆதரவளிக்கிறார்கள்.

எனவே, இந்த முறையை கடைப்பிடிக்கும் பட்சத்தில் இலங்கை அணிக்கு பக்கபலமாக மாறும் நேயர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது எமது எண்ணப்பாடாக உள்ளது.

அதற்கு முன்னதாக இலங்கை தெரிவுக்குழு மற்றும் கிரிக்கெட் சபைக்குள் தமிழ் பேசும் ஒரு அங்கத்தவரையாவது இணைத்துக் கொள்ள வேண்டும்.

அவர் ஒரு முதலீட்டாளராகவோ அணியை வழிநடத்த உதவி புரிபவராகவே இருந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும்.

இது தமிழ் விஷனின் தேசிய அணி தொடர்பான ஆர்வத்தில் எழுத்தப்பட்ட சிறப்புப்பார்வை மற்றும் சிறிய ஆலோசனைகள்..

நன்றி!