சிவனொளிபாதமலை யாத்திரை காலம் டிசம்பரில் ஆரம்பம்!
டிசம்பர் மாதம் 26ஆம் திகதி பௌர்ணமி தினத்துடன் சிவனொளிபாதமலை யாத்திரையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நல்லத்தண்ணி பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
குறித்த கலந்துரையாடலின் போது, சிவனொளிபாதமலைக்கு யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதிகள் மற்றும் தரிப்பிட வசதிகள் குறித்து பாதுகாப்பு துறையினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.
இதன்போது, கருத்துரைத்த நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, சிவனொளிப்பாத மலைக்கு யாத்திரை வருபவர்கள் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் அதேநேரம் ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் வருடாந்தம் பருவக்கால நிறைவின் போது பெருந்தொகையான பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், குறித்த கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு 20 இலட்சம் ரூபாய் வரை பிரதேச சபைக்கு ஒதுக்க வேண்டி உள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.