அவநம்பிக்கை பிரேரணை விவாதத்தை இரண்டு நாட்கள் நடத்த தீர்மானம்!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான விவாதத்தை, இரண்டு நாட்கள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டத்தின் போது, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், இந்த கூட்டம் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமானது.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்கள் சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான விவாதத்தை 3 நாட்கள் நடத்துவதற்கு கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் அது தொடர்பான விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 20ஆம் திகதி மாலை 4.30க்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 44 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்ட அவநம்பிக்கை பிரேரணை அண்மையில் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு முரணாக நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆட்சேபனையை புறக்கணித்து, ஆளுங்கட்சியின் தேவைக்கேற்ப குறித்த சரத்துகளை நிறைவேற்ற சபாநாயகர் இடமளித்ததாக குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சிகள் இந்த அவநம்பிக்கை பிரேரணையை முன்வைத்துள்ளன.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகளை பக்கச்சார்பற்ற முறையில் பாதுகாக்க வேண்டிய சபாநாயகர், அந்த பதவிக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குறித்த அவநம்பிக்கை பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளன.