மத்திய கிழக்கில் போர் பதற்றம் - விமான சேவைகள் இரத்து நீடிப்பு
ஜெர்மனிய விமான சேவை நிறுவனமான லுப்தான்சா, ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கான விமான சேவையை எதிர்வரும் சனிக்கிழமை வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்ற சூழலால் இந்த முடிவை எடுத்ததாக லுப்தான்சா தெரிவித்துள்ளது.
ஜெர்மனின் பிராங்க்போர்ட் நகரில் இருந்து தெஹ்ரானுக்கு வாரத்திற்கு 5 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
முன்னதாக வியாழக்கிழமை வரை அறிவிக்கப்பட்டிருந்த விமான சேவை இரத்து, தற்போது சனிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
லுப்தான்சாவின் துணை விமான நிறுவனமான ஆஸ்திரிய ஏர்லைன்ஸ் தெஹ்ரானுக்கான விமான சேவை தொடர்கிறது.
வியன்னாவில் இருந்து தெஹ்ரானுக்கு குறுகிய நேரம் என்பதாலும் பகல் பொழுதில் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமெனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல், ஈரானிய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதும் அதற்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்த போவதாக தெரிவித்ததும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.