சூரிய சக்தி தொழில்நுட்பத்தில் இயந்திர படகுகள்!
மீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன செயற்பாட்டு முறைகளுடன் கூடிய புதிய ஆழ்கடல் கப்பலை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், லொரென்சோ புதா – 4 கப்பலில் இருந்த மீனவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சட்டமா அதிபர் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சூரிய சக்தி தொழில்நுட்பம் கொண்ட இயந்திர படகுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கப்பல் கண்காணிப்புத் தரவுகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தளங்களை முன்னறிவிப்பதும் தற்போது ஆராய்ச்சி மட்டத்தில் உள்ளது.
இது தொடர்பான பகுப்பாய்வு மென்பொருள் தயாரிப்புப் பணிகள் தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு முதல் கப்பல் கண்காணிப்பு அமைப்பு முழுமையாக செயல்படும் எனவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், மீன்பிடி சட்டத்தை மறுசீரமைத்து, 1996-ம் ஆண்டு நடைமுறையில் இருந்த மீன்பிடி சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் கடுமையான சட்டம் இயற்றவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.