ஹட்டன் - கொழும்பு பிரதான பாதையில் மண்சரிவு - நேற்று இரவு முதல் போக்குவரத்து முற்றாக துண்டிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண கால நிலையை தொடர்ந்து மத்திய மலை நாட்டின் சரிவு பகுதிகளில் மாலை வேளையில் கடும் மழை பெய்து வருகின்றது. நேற்றும் (07) நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசகளில் கடும் மழை பெய்துள்ளது.
கினிகத்தேனை பகுதியில் நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் தியகலை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த வீதியூடான போக்குவரத்து தியகலை பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளமையால் ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - கண்டி ஆகிய பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மண்சரிவு காரணமாக இன்று கொழும்பு செல்லும் பொது போக்குரவத்து பேருந்துகள் நோட்டன் வழியாகவும், கண்டி செல்லும் வாகனங்கள் போகவத்த - பத்தனை ஊடாகவும் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வருவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் தொடர்ந்து மண்திட்டு தொடர்ந்து சரிவதனால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு குறித்து கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேற்பார்வை மற்றும் ஆய்வினை மேற்கொண்ட நிலையில், பிரதான வீதி ஊடான போக்குவரத்தை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பொது மக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீதியில் சரிந்துள்ள மண்திட்டுகள் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் இன்று அதிகாலை முதல் வீதி போக்குவரத்து அதிகாரசபை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.