"மசூதிகள் தென்படவே கூடாது"  துணியால் மறைத்ததால் கொதித்​தெழுந்த இஸ்லாமியர்கள்!

"மசூதிகள் தென்படவே கூடாது"  துணியால் மறைத்ததால் கொதித்​தெழுந்த இஸ்லாமியர்கள்!

இந்தியாவின் வடமாநிலங்களில் சிவபக்தர்களின் கான்வார் யாத்திரையை முன்னிட்டு மாநில அரசுகள் விதித்த உத்தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 

இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கான்வார் யாத்திரை செல்லும் வீதியில் உள்ள மசூதிகள், மஜார் உள்ளிட்டவை திரைப்போட்டு மூடப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது திரைச்சீலைகள் அகற்றப்பட்டுள்ளன.

வடமாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சிவபக்தர்கள் கான்வார் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த யாத்திரை என்பது உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் மிகவும் பிரபலம். 

சிவ பக்தர்கள் சிவபெருமான் போன்று வேடமணிந்து கங்கை நதி நீரை சேகரித்து ஒவ்வொரு சிவன் கோவில்களுக்கும் சென்று அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த யாத்திரை என்பது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடக்கும். இந்த ஆண்டு ஷ்ரவண மாதமான ஜூலை 22ம் திகதி இந்த யாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. 

ஓகஸ்ட் 19ம் திகதி தேதி வரை இந்த யாத்திரை என்பது நடைபெற உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சிவபக்தர்கள் ஹரித்வார், கவுமுக், கங்கோத்ரி உட்பட பல இடங்களுக்கு பாதயாத்திரை சென்று கங்கை நதியில் இருந்து புனித நீர் சேகரித்து வந்து சிவாலயங்களில் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இதற்காக பாஜக ஆளும் உத்தரகாண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கான்வார் யாத்திரையையொட்டி அம்மாநில அரசுகள் விதித்த உத்தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதாவது கான்வார் யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள உணவகங்களின் பெயர் பலகையில் உரிமையாளரின் பெயர் விபரம் குறிப்பிட வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் உத்தரவிட்டனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஆனாலும் உத்தரவுகள் திரும்ப பெறப்படவில்லை. மேலும் இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தன.

இதனால் அந்த விவகாரம் முடிவுக்குவந்தது. இந்நிலையில் தான் உத்தரகாண்ட்டின் ஹரித்வாரில் நடந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது ஹரித்வார் அருகே ஜ்வாலாபூர் என்ற இடம் உள்ளது. இதன் வழியாக சிவபக்தர்கள் கான்வார் யாத்திரை சென்று வருகின்றனர். 

இந்நிலையில் தான் ஜ்வாலாபூரில் சிவபக்தர்கள் செல்லும் சாலையில் உள்ள உள்ள மசூதிகள் மற்றும் மஜார் ஆகியவை திரைப்போட்டு மூடப்பட்டுள்ளது. மஜார் மற்றும் மசூதிகள் வெளியே தெரியாத அளவுக்கு அந்த கட்டங்கள் திரைச்சீலை போட்டு மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக அரசியல் கட்சிகளில் உள்ள தலைவர்கள், இஸ்லாமிய அமைப்பினர் இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். 

மேலும் மசூதி மற்றும் மஜாரை மறைக்க கட்டப்பட்டுள்ள திரைச்சீலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து திரைச்சீலை அகற்றப்பட்டது. 

முன்னதாக இதுபற்றி அம்மாநில அமைச்சர் சத்பால் மகராஜ் கூறுகையில், ‛‛அமைதியை நிலைநாட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. புதிதாக கட்டங்கள் கட்டும்போது திரைச்சீலைகள் போட்டு மறைப்பது போன்ற நடவடிக்கை தான்'' என்று நியாயப்படுத்தினார். 

அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நயீம் குரேஷி கூறுகையில், ‛‛இதுபோன்ற சம்பவத்தை நான் வாழ்நாளில் பார்த்தது இல்லை. முஸ்லிம்களாகிய நாங்கள் எப்போதும் சிவபக்தர்களை கன்வார் திருவிழாவிற்கு வரவேற்கிறோம்.

அவர்களுக்கு பல்வேறு இடங்களில் சிற்றுண்டி ஏற்பாடு செய்கிறோம். இது ஹரித்வாரில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இப்படி இருக்கும்போது திரைச்சீலை கலாசாரம் வருத்தமளிக்கிறது'' என விமர்சனம் செய்தார்.