தமிழ் பொது வேட்பாளர் வடக்கு கிழக்கு மக்களை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்!
தமிழ் மக்கள் பொதுச் சபை - தமிழ் தேசியக் கட்சிகள் ஆகியவற்றுக்கான அன்பான வேண்டுகோள் ஒன்று வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு நீங்கள் முடிவு செய்துள்ள நிலையில் அதில் அரசியல் கட்சியில் அங்கம் வகிக்காத பொதுவான ஒரு நபரை தெரிவு செய்ய வேண்டிய நிலையில் அனைவரும் இருக்கிறோம்.
ஆனால் அந்த நபர் வடக்கு கிழக்கு மக்களை நன்கு தெரிந்தவராகவும் ஆரம்ப காலம் தொட்டு தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை தொடர்பான பூரண அக்கறை உள்ளவராகவும் தமிழ் மக்களால் மதிக்கப்படுபவராகவும் இருக்க வேண்டும்.
அத்துடன் அவர்களின் அபிலாசைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நியாயமான முறையில் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய வல்லமை பொருந்தியவர் ஆகவும் இருக்க வேண்டும் அவ்வாறு பலரை வடக்குக் கிழக்கில் தேடிய போதும் யாருமே தற்போது இருக்கும் அரசியல்வாதிகள் அதற்கு தகுதியான நபர்கள் அல்ல.
எனவே, இந்த நிலையை கருத்தில் கொண்டு சர்வதேச நாடுகளுடனும் நன் மதிப்பையும் பெற்ற ஒருவரை தெரிவு செய்ய வேண்டியது அனைவரது கடமையாகும்.
இதற்கு இலங்கையின் நீதித்துறையில் 27 வருடங்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பொருத்தமான நபராக அமைவார் என்பது எங்களது எதிர்பார்ப்பு.
ஆனால் அவர் அதற்கு உடன்படுவாரா என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
ஆனால் பொது அமைப்புகள் மக்கள் அரசியல் கட்சிகள் சென்று கேட்கும் பொழுது அவர் அதற்கு செவி சாய்க்கக்கூடிய சந்தர்ப்பம் உண்டு.
மேன்மை தங்கிய நீதிபதி அவர்கள் மிகவும் ஆளுமை மிக்க ஒரு நேர்மையான மனிதர் இலங்கையின் நீதித்துறையின் வரலாற்றில் இரண்டு தடவைகள் மேல் மாகாணத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்,
வவுனியாவில் அவர் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் அமெரிக்க அரசாங்கத்தினால் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டு அங்கு விருது வழங்கி பாராட்டப்பட்ட ஒருவர்.
தமிழ் மக்கள் சார்பாக தனி ஒருவராக நின்று நீதித்துறையில் பல்வேறு வழக்குகளில் கிட்டத்தட்ட 67 இலங்கை ராணுவ அதிகாரிகள் உட்பட 637 க்கும் அதிகமான ராணுவத்தினரையும் நீதி மன்றுக்கு அழைத்து விசாரித்த பெருமை அவரையே சாரும்.
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி தயாரத் நாயக்க, இலங்கையின் முன்னாள் விமானப்படை தளபதி ஏஆர் மாஸ்ஹல் ரோகான் குளத்திலக்க, இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி அட் மிரல் திசர சமரசங்க போன்றவர்கள் நேரடியாகவே இவரை இலங்கை சட்டமன்றக் கல்லூரியில் இடம் பெற்ற ஊடக மகாநாடு ஒன்றில் தமது ராணுவத்தினரை குற்றம் சுமத்தி பழிவாங்குகின்றனர் என குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இவர் மேல் நீதிமன்ற நீதிபதியாக வடக்குக் கிழக்கின் பல பகுதிகளில் பணியாற்றியுள்ளார்.
அதைவிட ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அல்ஷுசைன் இவர் வழங்கிய 2015 ஆம் ஆண்டு தீர்ப்பு குறித்து பாராட்டியதுடன் இலங்கை நீதிமன்ற வரலாற்றில் ராணுவத்துக்கு வழங்கப்பட்ட முக்கியமான தீர்ப்பு இது என்று தெரிவித்திருந்தார்.
அது மட்டுமல்ல மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட கொலை வழக்குகள் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ராணுவத்தின் செயல்பாடுகளில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் உள்ளீர்த்து நல்ல தீர்ப்புகளை வழங்கிய ஒரு சிறந்த நீதிமான்.
மூன்று மொழிகளிலும் கதைத்து உரையாட கூடிய வல்லமை பொருந்தியவர் சிங்களப் பிரதேசங்களில் கூட சிறந்த ஒருவராக பார்க்கப்படுபவர்.
இதனால் இவரை நிறுத்துவதன் மூலம் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் , முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள், கொழும்பு வாழ்தமிழ் மக்கள் அனைவரும் ஒரு தமிழருக்கு வாக்கு அளிப்பதாக நினைத்து வாக்களிக்கக்கூடிய ஒரே ஒரு மனிதர்.
சிங்களப் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட முக்கியமான அரசியல்வாதிகள் போட்டி போடுவதால் வாக்குகள் சிதறடிக்கப்படும்.
அந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து ஒருவருக்கு வாக்களிக்கும் போது அது தமிழ் மக்கள் சார்பாக பேரம் பேசும் சக்தியை உருவாக்கும்.
அந்தப் பேரம் பேசுபவர் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பற்றி நன்கு விளங்கிக் கொண்டவராக இருக்க வேண்டும்.
எந்த சலுகைகளுக்கும் கட்டுப்பட்டவராக இருக்கக் கூடாது உலக நாடுகள் மத்தியில் ஒரு நன்மதிப்பை கொண்டவராக இருக்க வேண்டும்.
எங்களுடைய நாட்டின் சட்ட திட்டங்கள் நாட்டின் மொழிகள் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும் மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு இருக்க வேண்டும்.
இவை அனைத்தும் அவருக்கு இருக்கிறது இதனால் இவரை பொது தமிழ் வேட்பாளராக நிறுத்துங்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் கோரப்பட்டுள்ளது.