நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்!
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (14) ஆரம்பமாகியுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (14) ஆரம்பமாகியுள்ளது.
குறித்த பயணிகள் கப்பல் சேவை 2 முறைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்று காலை 7 மணியளவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாகைதுறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை மெய்நிகர் தொழினுட்பம் மூலம் டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்துவைத்தார்.
பயணிகள் கப்பல், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவையை மெய்நிகர் தொழினுட்பம் மூலம் கொடியசைத்து ஆரம்பித்து வைத்த நிகழ்வில் உரையாற்றிய அவர்,
”இந்த கப்பல் சேவை இரு தரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதுடன், நமது நாடுகளுக்கு இடையேயான நீண்டகால பிணைப்பை வலுப்படுத்தும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பங்காளித்துவத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தை கூட்டாக ஏற்றுக்கொண்டோம்.
இணைப்பு என்பது இந்த கூட்டாண்மையின் மையக் கருப்பொருள்.
மகாகவி சுப்பிரமணிய பாரதி தனது 'சிந்து நதி' என்ற பாடலில் இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த கப்பல் சேவை அந்த வரலாற்று மற்றும் கலாசார தொடர்புகளை உயிர்ப்பிக்கிறது.
இணைப்புக்கான இரண்டு நாடுகளின் பார்வை போக்குவரத்துத் துறைக்கு அப்பாற்பட்டது.
இந்தியாவும் இலங்கையும் ஃபின்டெக் மற்றும் எரிசக்தி போன்ற பரந்த அளவிலான துறைகளில் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன” என்றும் பாரதப் பிரதமர் கூறியுள்ளார்.