பல ரயில் பயணங்கள் இரத்து - பயணிகளுக்கான அறிவிப்பு!
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று (09) நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பல அலுவலக ரயில் பயணங்கள் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (09) நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பல அலுவலக ரயில் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கோட்டையிலிருந்து நீர்கொழும்பு மற்றும் வெயங்கொடைக்கு தலா இரண்டு ரயில்களும் பொல்கஹவெலயிலிருந்து கோட்டைக்கு இரண்டு ரயில்களும், காலியிலிருந்து கோட்டைக்கு மூன்று ரயில்களும், அளுத்கமவிலிருந்து கொழும்பு கோட்டைக்கு ஒரு ரயிலையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இன்று (10) ரயில் பருவச்சீட்டுகளை வைத்திருக்கும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொள்ள பருவகால பயணச்சீட்டை பயன்படுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு சட்டவிரோதமானது எனவும், ரயில் சேவைகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பணிக்கு சமூகமளிக்காதவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரயில் நிலைய அதிபர்களினால் முன்னெடுக்கப்படும் தொழில் நடவடிக்கைகளுக்கு ரயில் கட்டுப்பாட்டாளர்களின் ஒன்றியமும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் திஷான படபண்டிகே தெரிவித்தார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.