தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கை
இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனன.
கல்விப் பொதுத் தராதர உயர்தரம் , பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/ தொழில்நுட்பக்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்கள் இந்த புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க முடியும்.
அத்துடன், க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்குட்பட்ட மாணவர்கள் விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள் என இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ,பிறப்புச் சான்றிதழ், க.பொ.த சாதாரண தரம் அல்லது உயர் தரப்பரீட்சைப் பெறுபேற்றுத்தாள்கள், பெற்றோரது அண்மைய சம்பளத்தாள் விபரம், மாணவர்களது புதுப்பிக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பெற்றோரது வேலை தொடர்பாக தோட்ட அத்தியட்சகரின் கையொப்பம் என்பவற்றின் போட்டோ பிரதிகளுடன் இணைந்ததாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.
இந்திய உயர் ஸ்தானிகராலயம், ( 36-38 காலி வீதி, கொழும்பு 03) மற்றும் இந்திய துணை உயர் ஸ்தானிகராலயத்திலும் (இல. 42, ஹில்பஹந்துர மாவத்தை, அம்பிட்டிய வீதி, கண்டி) விண்ணப்பப் படிவங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஏப்ரல் மாதம் 29ஆம் திகதிக்கு முன்னதாக நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
கௌரவ செயலாளர், CEWET மே/பா, இந்திய உயர் ஸ்தானிகராலயம், த.பெ.இலக்கம்-882, கொழும்பு-03 என்ற முகவரிக்கு முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.