மனித பாவனைக்கு உதவாத பாஃம் எண்ணெய்யை விடுவிக்க உத்தரவிட்ட அதிகாரி!
மனித பாவனைக்கு உதவாத பாஃம் எண்ணெய்யைக் கொண்ட ஐந்து கன்டயினர்களை விடுவிக்க அறிவுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை சுங்கத்துறை அத்தியட்சகர் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்;டது.
இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட சுங்கத்துறை அத்தியட்சகர் தொடர்பில் சாட்சியங்கள் வெளியாகியுள்ள போதிலும் அவர் இதுவரையில் சந்தேகநபராக பெயரிடப்படாமைக்கான காரணம் தொடர்பில் நீதிவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வினவியுள்ளார்.
அதன் பின்னர், அவரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றில் உடனடியாக சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தை நீதவான் அறிவுறுத்தியதாக நீதிமன்றத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.