காலி சிறையில் இனங்காணப்பட்ட மர்ம தொற்றுடன் ரத்மலானையில் ஒருவர்....
காலி சிறைச்சாலையில் கைதிகள் இரண்டு பேர் மர்ம நோய்த் தொற்றினால் உயிரிழந்த நிலையில் அதே மெனிங்கோகோகல் தொற்றுடன் ரத்மலானை பகுதியில் ஒருவர் சுகாதாரஅதிகாரிகளால் இனங் காணப்பட்டுள்ளார்.
ரத்மலானை பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வரும் ஜா-எலவைச் சேர்ந்த ஒருவரே குறித்த மர்ம நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அண்மையில் காலி சிறைச்சாலையில், கைதிகள் சிலர் புதிய வகை பற்றீரியா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதுடன், இரண்டு பேர் உயிரிழந்தனர்.
பின்னர் சிறைச்சாலையிலிருந்து வெளியேறத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
சிறைச்சாலைக்கு கைதிகளை இணைத்துக் கொள்வதற்கும், கைதிகளை நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
மெனிங்கோகோகல் பற்றீரியா தொற்றுக்கான அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, கழுத்து வலி, வாந்திபேதி, உடலில் வெடிப்புகள் தோன்றுதல் போன்ற ஏற்படுகின்றன.
எவ்வாறாயினும், சில வாரங்களில் குறித்த தொற்றை நுண்ணுயிர் கொல்லிகள் மூலம் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டாவது சி.டி. பரிசோதனை இயந்திரம் நேற்று முதல் செயலிழந்துள்ளது.
நாளாந்தம் சுமார் 250 சி.ரி ஸ்கேன் பரிசோதனைகளை முன்னெடுக்கும் இயந்திரமே செயலிந்துள்ளதாக அரச கதிரியக்க தொழிநுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம குறிப்பிட்டுள்ளார்